தேவரியம்பாக்கம் அரசு பள்ளியில் குழந்தைகள் மருத்துவ முகாம்

வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் அரசு ஆரம்பப்பள்ளியில் குழந்தைகள் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒன்றிய, நடுநிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், கால்நடை மருந்தகம், இ சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், அரசு ஒன்றிய பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நேற்று ஒன்றிய பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.

முகாமில், சென்னை காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை சார்பில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு கிராமத்தில் உள்ள பிறந்த குழந்தைகள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் ஆரம்பப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்டவைகள் குறித்து பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். மேலும், நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு அருகாமையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை பெறவும் ஆலோசனை வழங்கினர். இந்த முகாமில் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜோசப்பின்நிர்மலா, கிராம மக்கள், குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: