தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் இனிப்பு வாங்க வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் சா.மு.நாசர் அழைப்பு

சென்னை: அரசு ஊழியர்கள் தீபாவளிக்கு ஆவினில் இனிப்புகளை வாங்க வேண்டும் என்று பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பத்தூரில்  உள்ள ஆவின் நிறுவனத்தில் அமைச்சர்  ஆவடி சா.மு. நாசர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கூறுகையில், ‘‘ஆவினில் இந்தாண்டு ஒன்பது வகையான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஆண்டு விற்பனை 82 கோடியே 24 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆவின் நிறுவனத்தை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் வகையில், இந்தாண்டுரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உத்தரவிட்டது போல் இந்தாண்டும் அரசு அதிகாரிகள் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்க வேண்டும். மேலும், அம்பத்தூர் மட்டுமல்லாமல் திருவள்ளூர், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் நிறுவன கிளைகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.  மேலும் புக்கிங் செய்தால் இலவச டோர் டெலிவரியும் செய்யப்படும்.’’ என அவர் கூறினார்.

Related Stories: