×

இதயத்திற்கு இதமான கொத்தவரை!

நன்றி குங்குமம் தோழி

கொத்தவரங்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.

*கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

*இதில் மிகுந்துள்ள சுண்ணாம்புச்சத்து எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுவலி ஏற்படாமல் பாதுகாக்கும்.

*இதயத்திற்கு இதமானது. ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

*கொத்தவரையில் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். இதில் சர்க்கரை, கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

*பெண்களுக்கு, குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் கொத்தவரையில் மிகுந்திருக்கிறது. இதில் அதிக அளவு போலிக் அமிலம் இருப்பதால் குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு ஆகியவை சீராக வளர்ச்சி பெற உதவும். வைட்டமின் ‘கே’ குழந்தை நன்கு வளரவும் எலும்புகள் வலிமை பெறவும் உதவும்.

*கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்க்க ரத்த ஓட்டம் சீராவதுடன் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் உதவுகிறது.

*செரிமானத்திற்கு உதவுவதுடன் இரைப்பையில் தங்கிப் புற்றுநோய் உருவாக்கும் கிருமிகளை வெளியேற்றவும் உதவுகிறது.

*மனைஉளைச்சல், படபடப்பை போக்கிட உதவுகிறது. ஆசனவாய்ப் புற்றுநோயை தவிர்க்கும் வல்லமை கொத்தவரைக்கு உண்டு.

*கொத்தவரங்காய் போலவே அதன் இலைக்கும் மகத்துவம் உண்டு. கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயை தணிப்பவை.

*வலி நிவாரணியாக, கிருமி நாசினியாகவும் இதன் இலை செயல்படுகிறது. ஒரு கைப்பிடி அளவு இலையுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் ஆஸ்துமா எனும் மூச்சிரைப்பு குறையும். இரவு நேரப்பார்வை கோளாறை தடுக்கும்.

*கொத்தவரை இலை ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

*கொத்தவரை விதையை கொதிக்க வைத்துக் குடித்தால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள் குறையும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு கொத்தவரங்காய் மருந்தாகிறது.

தொகுப்பு: மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

Tags :
× RELATED பார்ப்பவர் கண்களில் அழகு..!