தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை அனைவரும் 28ம் தேதி இலவசமாக பார்க்கலாம்: காவல்துறை தகவல்

சென்னை: தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி வரும் 28ம் தேதி அனைவருக்கும் இலவச அனுமதி அளிக்கப்படவுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம், கடந்த ஆண்டு செப் 28ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதை பார்வையிட வரும் அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்ட நாள் முதல் இந்த ஓர் ஆண்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள், வெளிநாட்டவர்கள், பல்வேறு திரைத்துறையினர் மற்றும் தமிழக காவல்துறை, நீதித்துறை, ஆட்சிப்பணி உயர் அதிகாரிகள், காவல் சிறார் மன்ற மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்ட பார்வையாளர்கள் என மொத்தம் 30,285 பார்வையாளர்கள் காவல் அருங்காட்சியகத்திற்கு நேரில் வருகை புரிந்து பார்வையிட்டுள்ளனர்.

காவல் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு நாளினையொட்டி வரும் 28ம் தேதி ஒருநாள் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 14.09.2022 முதல் 26.09.2022 வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, விவாதமேடை, மாறுவேடப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு ஒரு வருட நிறைவு நாளான  28 ம் தேதி அன்று எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் காலை 11 மணியளவில் காவல் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சியும், மாலை 3 மணியளவில் மோப்பநாய் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து மாலை 5மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளனர்.

Related Stories: