வரைவு துறைமுகங்களின் சட்ட மசோதா 2022ல் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சியை பாதிக்கும் பிரிவுகளை நீக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: வரைவு துறைமுகங்களின் சட்ட மசோதா 2022ல் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சியை பாதிக்கும் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள வரைவு ‘இந்திய துறைமுகங்கள் மசோதா-2022’ மாநில உரிமைகளையும் மாநில அரசுகளால் தற்போது நிர்வகிக்கப்படும் துறைகளுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த வரைவு மசோதா உள்நாடு மற்றும் வெளிநாட்டு துறைமுகங்களை கையாண்டு வரும் மாநில அரசுகளின் சிறந்த செயல்பாடுகளை மறந்துவிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பெரிய துறைமுகங்களை கையாளும் ஒன்றிய அரசின் துறைமுகத்துறையின் வளர்ச்சியைவிட சிறு துறைமுகங்களை கையாளும் மாநில அரசுகளின் துறைமுக துறை வளர்ச்சி அதிகமாகும். பல மாநிலங்கள் குறிப்பாக குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவை சிறு துறைமுகங்கள் வளர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளன. துறைமுகங்களின் சரக்கு கையாளும் அளவும் அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது கொண்டு வரவுள்ள வரைவு மசோதாவால் சிறு துறைமுகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிறு துறைமுகங்களை ஒழுங்குப்படுத்த கொண்டுவரப்படும் கடல்சார் மாநில வளர்ச்சி கவுன்சிலில் ஒன்றிய அரசின் 5 செயலாளர்கள், ஒரு இணை செயலாளர் மற்றும் கடலோர யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் இடம்பெறவுள்ளனர்.

இந்த புதிய மசோதாவால் கடலோர மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்படும். இதற்கு எங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறோம். ஏற்கனவே சிறு துறைமுகங்கள் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த துறைமுகங்களின் மேலாண்மை குறித்த சட்ட திருத்தம் அந்தந்த மாநிலங்களின் சட்டப் பேரவைகளால் மட்டுமே கொண்டுவரப்படவேண்டும்.

ஆனால், ஒன்றிய அரசு தற்போது கொண்டுவரப்படும் வரைவு மசோதாவால் கடலோர மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அந்த அளவில் மேல் முறையீடு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். எனவே, ஒன்றிய அரசு கொண்டு வரும் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதாவின் 2 மற்றும் 3ம் பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும். மாநில கடலோர வாரியத்தை நீக்கம் செய்யும் வகையிலான பிரிவு 5-யும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இந்திய துறைமுக துறை ஒன்றிய அரசின் குறைந்த அளவிலான கட்டுப்பாட்டில் இருந்தால்தான் கூடுதல் துறைமுக மேலாண்மை நடைபெறும். இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிரிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: