தேனி மாவட்டத்தில் ஆறுகளில் ஆர்ப்பரித்து ஓடுது தண்ணீர்: விழிப்புணர்வில்லா மக்கள் ஆபத்தான குளியல்; நீர்நிலைகளில் கண்காணிப்பு அவசியம்

உத்தமபாளையம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை மற்றும் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும்.

இதில் உள்ள ஆபத்தை அறியாமல் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் நீர்நிலைகளில் குளிக்கின்றன. தண்ணீர் ஓடும் வேகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதனை உணராமல் சிலர் ஆபத்தான குளியலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். தண்ணீரின் வேகமான சுழலில் சிக்கிய பலர் கடந்த காலங்களில் இழுவைத் தண்ணீர் அடித்து சென்று உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் , கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர்.

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் அசோக் (29). இவர் நேற்று முன்தினம் அனுமந்தன்பட்டி முல்லை ஆற்றுப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, அவர் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவரை ஆற்று தண்ணீர் இழுத்து சென்றதை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக, இவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த உத்தமபாளையம் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அசோக்கை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள்  கூறுகையில், நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால், ஆபத்தை உணராமல்  குளிப்பதும், உற்சாகமாக துவைப்பதும் அதிகமான அளவில் நடக்கிறது. பள்ளங்கள்  அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் என  தெரியாமல் மாணவர்கள், சிறுவர்கள் துள்ளிக்குதித்து ஆற்றில் குளியல்  போடுகின்றனர். இதனால் நீச்சல் தெரிந்தவர்களை கூட நொடிகளில் இழுத்து  சென்றுவிடுகிறது. தண்ணீரில் மூழ்குபவர்கள் சில நிமிடங்களில் மூச்சுத்திணறி  இறக்கும் நிலை உள்ளது. எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளை மிக கவனமாக  பார்ப்பதுடன் ஆற்றில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்க வேண்டும்,  என்றனர்.

Related Stories: