ஒரே ஆண்டில் ரயில்வே வசூல் சிக்கன ஏசி பெட்டியால் ரூ.231 கோடி வருவாய்

புதுடெல்லி: சிக்கன விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட எகானமி 3 அடுக்கு ஏசி பெட்டிகள் மூலம் ஓராண்டில் ரூ.231 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, மானியத்துடன் கூடிய எகானமி ஏசி 3 அடுக்கு பெட்டிகள் கடந்த ஆண்டில் ரயில்வே அறிமுகப்படுத்தியது. வழக்கமாக ஏசி 3 அடுக்கு பெட்டியில் 72 பெர்த்கள் இருக்கும். எகானமி ஏசி பெட்டியில் 83 பெர்த்கள் இருக்கும். அதாவது, வழக்கமான 3 அடுக்கு ஏசி பெட்டியில் இரண்டு பக்கம் பெர்த்கள் இருக்கும் நிலையில், இவற்றில் ஸ்லீப்பர் வகுப்பை போல 3 பெர்த்கள் இருக்கும். அதோடு இந்த பெட்டிகளில் கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏசி பெட்டிகளை விட 6 முதல் 7 சதவீதம் வரை குறைவு. இந்த எகானமி ஏசி பெட்டிகள் அறிமுகப்படுத்திய ஓராண்டில் ரூ.231 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2022 ஆகஸ்ட் மாதம் வரை 21 லட்சம் பயணிகள் இதில் பயணித்துள்ளனர். இதுவரை இதுபோல 370 பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் தேவை அதிகரித்துள்ளதால் மேலும் பல எகானமி ஏசி பெட்டிகளை சேர்க்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Related Stories: