தமிழகம் முழுவதும் 1000 காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கோலப்பன்சேரி ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று 1000 காய்ச்சல் தடுப்பு சிறப்பு  மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள், பெண்கள் என கிராம பொதுமக்கள் பங்கேற்று காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:  

பருவ காலம் மாற்றம் என்பதால் காய்ச்சல் அதிகரித்துவருகிறது. முதல்வர் அறிவுறுத்தலின்படி சென்னையில் 100, தமிழகம் முழுவதும் 900 இடங்கள் என காய்ச்சல் தடுப்பு முகாம் தொடங்கபட்டு உள்ளது.

பருவநிலை மாற்றங்கள் வரும் போது ஒன்றரை சதவீதம் அளவுக்கு காய்ச்சல் உயர்வது வழக்கம். அதுபோல் தான் தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு, ப்ளூ, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் தமிழகத்தின் எந்த பகுதியிலும் மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருக்குமானால் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவில் நாம் அச்சம் கொள்ளத்தேவையில்லை.  டெங்கு கொசு ஒழிப்பு பணியும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களைவிட தற்போது டெங்கு பாதிப்புகள் குறைந்துள்ளது.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சித்துறை, ஊரக உள்ளாட்சித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை என 3 துறைகளும் இணைந்து மக்களை காப்பாற்ற 600 அதிகாரிகள், பணியாளர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த 3 துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்ட அளவில் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இதில் சுகாதார துறை  முதன்மை செயலாளர் செந்தில்குமார், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ. கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காணொலி மூலம் பிரசவம்: 2 பேர் டிரான்ஸ்பர்

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு  பகுதியில் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண்ணின் குழந்தை இறந்து பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியான அவர் குழந்தை தலைகீழாக இருப்பதாகவும் ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தினார்கள். அவர் ஸ்கேன் எடுத்துவிட்டு தனது உறவினர் இறந்துவிட்டதால் அந்த இறுதி சடங்கில் கலந்துகொண்டு விட்டு 2 நாட்கள் கழித்து பிரசவத்திற்காக வந்தார். இதில் தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதில் காணொலி காட்சி மூலம் பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் அந்தநேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: