முதல்வர் தலைமையில் வள்ளலார்-200 முப்பெரும் விழா: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: முதல்வர் தலைமையில் வள்ளலார்-200 முப்பெரும் விழா வரும் 5ம் தேதி நடக்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ‘வள்ளலார் -200’ எனும் பெயரில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விரைவில் முதல்வர் இதற்கான வரைபடத்தை பார்த்து ஒப்புதல் வழங்கிய பிறகு பணிகள் தொடங்கும். வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5ம் தேதி ‘தைக் கருணை ‘நாளாக முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார். வள்ளலார் -200  எனும் பெயரில் முப்பெரும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் தலைமையில் அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ளது. வள்ளலார் பிறந்தநாள், வள்ளலார் தர்மசாலா தொடங்கியதன் 156ம் ஆண்டு , வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டிய 152 ம் ஆண்டை கொண்டாடும் விதமாக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. வள்ளலார் பக்தர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

அன்றைய தினத்தில் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. இதுவரை இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகள் 3 ஆயிரம் கோடிக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது. ரேவர் கருவி மூலம் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்துள்ளோம். விரைவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தாமன சொத்து பட்டியல் முழுமையாக வெளியிடப்படும். வக்ஃபு வாரியம்  தங்களது சொத்துகள் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து விசாரிக்க சொல்லி இந்து அறநிலையத்துறை ஆணையாளர் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்ற பிறகு இந்த விசயத்தில் முழு கருத்தையும் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: