காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தத்தில் சேதமடைந்த நிழற்குடை, இருக்கைகள்: சீரமைக்க பயணிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் காமராஜர் சாலையில் காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2019-2020ம் ஆண்டு ரூ.20 லட்சத்தில்  பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடை கொரோனா, பேரிடர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறாமலேயே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதில், காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, களக்காட்டூர், வேடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பயணிகள் இந்த நிறுத்தத்திற்கு வந்து பேருந்தை பிடித்து வீடுகளுக்கு செல்வார்கள்.

இந்நிலையில் அந்த நிழற்குடை முன்பு வாகன ஓட்டிகள் அதிக அளவில் பைக்குகளை நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், நிழற்குடைக்கு செல்லும் வழியை அடைத்து சிறுகடைகள் உள்ளதால் நிழற்குடையில் சென்று அமர முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும், தற்போது இருக்கைகளை  சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் இந்த இருக்கைகள் பெயர்த்து செல்லக்கூடிய சூழலும் உள்ளது. இரவு நேரங்களில் இந்த நிழற்குடையில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்ல அச்சப்படுகின்றனர்.

இதனால், வெயில் மற்றும் மழை நேரங்களில் காத்திருக்கும் பயணிகள், நிழற்குடையில் அமர முடியாமல் கால்கடுக்க காத்திருக்கும் அவலம் உள்ளது. எனவே, பயணிகளின் நன்மை கருதி, நிழற்குடையில் சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்கவும், அவற்றை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.

Related Stories: