மணமை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டித்தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சி லிங்கமேடு பகுதியில் புதிதாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் மணமை, தர்காஸ், மலைமேடு, லிங்கமேடு, கீழக்கழனி, சிவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 850க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். மேலும், மணமை ஊராட்சியில் பெருமாளேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான 2 ரேஷன் கடையில் மேற்கண்ட கிராமங்களில் உள்ள 850க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன.

இதில், குறிப்பாக கீழக்கழனி, சிவராஜபுரம், லிங்கமேடு ஆகிய பகுதிகளில் இருந்து 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 3 கி.மீ. தூரம் உள்ள மலைமேடு பகுதிக்கு நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது. மேலும், ஒரு சிலநேரங்களில் ரேஷன் கடை மூடி இருப்பதால் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி வருகின்றனர். எனவே, மணமை ஊராட்சி லிங்கமேடு பகுதியில் நடமாடும் ரேஷன் கடையோ அல்லது நிரந்தரமாக ஒரு ரேஷன் கடையோ கட்டித்தர வேண்டும் என்று  செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: