மகப்பேறு, குழந்தைகள் நலம் உள்பட பல துறைகளில் தமிழகம் மற்றும் மேகாலயா மாநில சுகாதாரத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: மகப்பேறு, குழந்தைகள் நலம், சித்த மருத்துவத்துக்கு தேவையான மூலிகைதொடர்பாக தமிழகம் - மேகாலயா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழகம் - மேகாலயா மாநிலங்களுக்கு இடையே சுகாதார துறையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தை நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி பயிற்சிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேகாலயா மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைக்கவும், குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி தருவதற்காகவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அந்த மாநில குழுவினர் கேட்டறிந்தனர். மேலும் இயற்கை சூழல் கொண்ட மேகாலயாவில் இருந்து சித்தா மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் மூலிகையை  தமிழகத்திற்கு கொண்டுவர புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது.

நம் மருத்துவர்கள் மேகாலயாவிற்கு சென்று அங்குள்ள மக்களுக்கு அளித்த மருத்துவ முறைகள் குறித்தும் தெரிந்து கொள்ள இருக்கிறோம். மதர் என்கிற திட்டம் ஒன்றை மேகாலயா அரசு கொண்டு வந்துள்ளது. அதே போல தமிழகத்திலும் கொண்டு வர அத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கேட்டு அறிந்துகொண்டோம். ஹெச்1என்1 வைரஸ் 368  ஆக அதிகரித்துள்ளது. அதில் 5 வயதிற்கு உட்பட்ட 42 பேர், 5-14 வயதுடையவர்கள் 65 பேர், 15-65  வயதுடையவர்களில் 192 பேர், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேர் என மொத்தம் 368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 நாட்களில் குணமடைந்து விடுவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: