வத்தலக்குண்டு விருவீடு பகுதியில் விவசாயத்திற்காக 58ம் கால்வாய் திறக்கப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு

வத்தலக்குண்டு : விருவீடு ஊராட்சி பகுதியில் விவசாயத்திற்காக 58ம் கால்வாய் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் விருவீடு ஊராட்சி பகுதியில் நான்கு கண்மாய்கள் உள்ளன. கண்மாய்களில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் கால்வாசி கண்மாய் நிரம்பி இருந்தது. அது கடந்த 10 நாட்களாக அடிக்கும் கொளுத்தும் வெயிலில் வறண்டு போய்விட்டது. இப்பகுதியில் முருங்கை, அவரை, நெல்லி, வாழை, தக்காளி, போன்ற விவசாயங்கள் பிரதானமாக செய்யப்படுகிறது. மேலும் 50க்கும் மேற்பட்ட கலர் மீன் பண்ணைகள் இங்கு உள்ளன. மழை பெய்து கண்மாய்கள் நிரம்பும்போது கிணறுகளில் ஊற்றெடுத்து கிணறு நிரம்புகிறது. அந்த கிணற்று நீரை வைத்து விவசாயிகள் பயிர்களை வளர்ப்பது, மீன் பண்ணைகளை பராமரிப்பது வழக்கம்.

மழை பெய்யாத நிலையில் கண்மாய்கள் வறண்டு விடும். அப்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் 58 ஆம் கால்வாய் மூலம் கண்மாய்களை நிரப்புவது வழக்கம். 58 கிராமங்களில் உள்ள கண்மாய்கள் நிரம்புவதற்காகவே 58 ஆம் கால்வாய் அமைக்கப்பட்டது. வைகை அணையில் நீர்மட்டம் 69 அடிக்கு மேல் இருக்கும் போது 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும். தற்போது வைகை அணையில் 70 அடிக்கு மேலாக தண்ணீர் இருக்கும் நிலையில் இதுவரை 58 ஆம் கால்வாய் திறக்கப்படவில்லை. வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் வீணாக ஓடிச்சென்று கடலில் கலக்கிறது. இந்த தண்ணீர் 58ம் கால்வாய் வழியாக விவசாயத்திற்கு பயன்படுகிறது.

மேலும் பத்து ஆண்டுகளாக போராடி ஐந்து வருட ஐந்து வருடங்களாக கட்டப்பட்ட தொட்டி பாலமான 58 கால்வாய் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.இதனால் விருவீடு, விராலிமாயன்பட்டி, நடகோட்டை ஊராட்சிகளில் உள்ள முருங்கை விவசாயம், அவரை விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி செய்த விவசாயப் பயிர்கள் கருகுகிறது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். இவை மட்டுமின்றி இங்குள்ள கலர் மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும் பல்லாயிரக்கணக்கான கலர் மீன்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது கிணறுகளின் நீர்மட்டம் கிடு கிடு என்று இறங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே இனியும் தாமதம் இன்றி 58 ஆம் கால்வாயை திறந்து விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை கொடுத்துள்ளனர். வைகை அணையில் தண்ணீர் 69 அடிக்கு மேல் இருக்கும் போது 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசாணை இருந்தும் அதிகாரிகள் 58 ஆம் கால்வாய் திறக்க தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் தர்மர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு 58 ம் கால்வாயில்தண்ணீர் திறக்கப்பட்டதால் கோடைகாலத்திலும் குடிநீர் தட்டுப்பாடின்றி சீராககிடைத்தது. தற்போது அடிக்கின்ற கொளுத்தும் கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் விருவீடு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் விவசாயம் அழிந்துவிடும். எனவே அதிகாரிகள் இனியும் காலம் கடத்தாமல் 58 ஆம் கால்வாய் திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

போராடி கிடைத்த தண்ணீர்

உசிலம்பட்டி பகுதி கிராமங்கள், வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகள் மட்டுமல்லாது பல பகுதிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கபட்ட கோரிக்கை தான் திருமங்கலம் பிரதான கால்வாயை நீட்டிக்க வேண்டும் என்பது. இதற்கு வைகை அணை பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். 1960 களில் தொடங்கிய போராட்டம் 1980 களில் சூடுபிடிக்க தொடங்கியது. அதன் பிறகு 1996ம் ஆண்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 1999ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. மொத்தமாக 58 கிராமங்கள் போராடி இந்த திட்டத்தை கொண்டு வந்ததால் இந்த திட்டத்திற்கு 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம் என பெயர் வைக்கப்பட்டது.

Related Stories: