அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த கோவில்பட்டி இன்ஸ்பெக்டர், காவலர் மீது தாக்குதல்-பா.ஜ. நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது

கோவில்பட்டி :  கோவில்பட்டியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக பாஜ நிர்வாகிகள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ்நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டினர்.

அப்போது  அங்கு ரோந்து வந்த கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநரான காவலர் பாண்டி ஆகியோர், அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்தியதோடு போஸ்டர்களை பறித்துச் சென்றதாகவும், இதனால் ஆவேசமடைந்த பாஜ நகரத்தலைவர் சீனிவாசன் தலைமையிலான கட்சியினர் இன்ஸ்பெக்டர் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

 இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கி வந்த இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்தை பாஜ நகரத் தலைவர் சீனிவாசன், நிர்வாகி ரகுபாபு உள்ளிட்ட சிலர் சட்டையை பிடித்து இழுத்து கிழித்து தாக்கி காயப்படுத்தினர். இதைத் தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தினராம். இருந்தபோதும் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று சீனிவாசன், ரகுபாபு, வெங்கடேசன், பரமசிவம், பொன்சேர்மன் இந்து முன்னணி நகரச் செயலாளர் சீனிவாசன் ஆகிய 6 பேரையும் பிடித்து விசாரணைக்காக காவல்நிலையம் கொண்டு வந்தனர்.

 இதனிடையே காயமடைந்த இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த ஏடிஎஸ்பி கார்த்திகேயன், இருவரிடமும் நலம் விசாரித்து தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீசார் பாஜ நகர தலைவர் சீனிவாசன், நிர்வாகி ரகுபாபு உள்ளிட்ட 6 பேரை கைது செய்து கோவில்பட்டி கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் 6 பேரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: