பெரியார் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டு விதிமீறல் குறித்து விசாரணை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குனர், நூலகர் ஆகிய பணிகளுக்கான ஆள் தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம் பெரியார் பல்கலக்கழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக நூலகர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய இரு பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் 25ம் தேதி நடைபெறவிருக்கிறது. பல ஆண்டுகளாக காலியாக உள்ள இந்த பணியிடங்களை நிரப்புவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இந்த இரு பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படவில்லை. பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு அப்பட்டமாக மீறப்படுவதை எளிதாக கடந்து செல்ல முடியாது.

 தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக போராடியவர்களில் முதன்மையானவர் தந்தை பெரியார். அவரது பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் சமூகநீதி சூறையாடப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. இட ஒதுக்கீட்டு விதிகளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணிகளுக்கான நேர்காணலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முறையான இடஒதுக்கீட்டின்படி நியாயமான முறையில் இந்த பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: