திருவொற்றியூர் காமராஜ் நகரில் ஆரம்ப பள்ளி வளாகத்தில் சிதிலமடைந்த கட்டிடம்: அகற்ற வலியுறுத்தல்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 1வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் நகர் 3வது தெருவில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலைக்கு மாறியதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அருகில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதில் மாணவர்கள் மாற்றப்பட்டனர்.

ஆனால், சிதிலமடைந்த பழைய கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை இடிக்கவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் இந்த பழைய கட்டிடம் மேலும் வலுவிழந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், பள்ளி அருகே ரயில்வே பாதை இருப்பதால் இந்த வழியாக ரயில்கள் போகும்போது இந்த பழுதடைந்த கட்டிடம் அதிர்கிறது. இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் பீதியடைகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில், வார்டு கவுன்சிலர் சிவக்குமார் இந்த பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன் அதை அகற்றி விட வேண்டும், என்று கோரிக்கை விடுத்ததன் பேரில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆனாலும், மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த  பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: