மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க ராஜஸ்தான் காங். தீர்மானம்; அசோக் கெலாட் பின்வாங்கியதால் பரபரப்பு

ஜெய்ப்பூர்: மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும்  என்று ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தலைவர் பதவி போட்டியில் அம்மாநில அசோக் கெலாட் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் அக். 17ம் தேதி தலைவர் பதவியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.

ஏற்கனவே ராகுல்காந்தி தலைவர் பதவியை கடந்த 2 ஆண்டுக்கு முன் ராஜினாமா செய்த நிலையில், தற்போது வரை சோனியா காந்திதான் இடைக்கால தலைவராக தொடர்கிறார். தலைமை மீதான அதிருப்தியால் பல தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகிவிட்டனர். இந்த நிலையில் தற்போது புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளதால் ராகுல்காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர். அதேநேரம் ராகுல்காந்திக்கு கட்சிக்குள் எதிர்ப்பும் உள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராஜஸ்தான் காங்கிரஸ் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அம்மாநில முதல்வரும், மூத்த தலைவருமான அசோக் கெலாட் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் இந்த தீர்மானம் முன்மொழிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அசோக் கெலாட் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று சிலர் கூறிவந்த நிலையில், அவர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் தேசிய தலைவர் பதவியை ஏற்கவோ அல்லது ராஜஸ்தான் அரசியலில் இருந்து வெளியேறவோ அவர் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக நேற்று நடந்த ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: