காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்; பெற்றோர்களுக்கு அமைச்சர் மா. சுப்ரமணியன் வேண்டுகோள்

சென்னை:தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில், மருந்துகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்தினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. நிர்வாக ரீதியாக  பணியிடை மாற்றம் செய்யப்பட்ட சிலர், அரசின் மீது உள்ள கோபத்தில் இது போன்ற தவறான தகவல்ளை பரப்புகின்றனர்.

தமிழகத்தில் 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது.  இதற்கு இப்போது 36 இடத்தில் மருந்து கிடங்குகள் உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு தேவையான 32 வகையான மருந்துகள் அந்தந்த மாவட்ட மருந்து கிடங்கில் 4 மாத காலத்திகு இருப்பு உள்ளது. மருந்து தொடர்பான செய்தியை வெளியிட, மருந்து கிடங்கில் ஆய்வு செய்யலாம். பொது மக்கள் அப்படி மருந்து தட்டுப்பாடு இருந்தால் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு மரபணு சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கு சிறப்பு நிலை ஆணை ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 47 பேர் எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. அதேபோல பள்ளிகளில் ஆசிரியர்களும் குழந்தைகளைவீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். மேலும்பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை. 

Related Stories: