அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர் பகுதியில் உலாவரும் மாடுகளால் விபத்து அபாயம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அம்பத்தூர்: அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர் பகுதிகளில் உலாவரும் மாடுகளால் விபத்து அபாயம் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னையையொட்டியுள்ள புறநகர் பகுதிகளில் சர்வசாதாரணமாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன, இவற்றை யாரும் கண்டு கொள்வதில்லை. மாடுகள், நாய்கள் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. திடீரென சாலையின் குறுக்கே ஓடும் மாடுகளால் விபத்து ஏற்படுகிறது.

வாகனங்களால் ஏற்படும் விபத்தைவிட கால்நடைகளால் ஏற்படும் விபத்து சமீபகாலமாக அதிகரித்துவிட்டது. அந்தவகையில், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர், வில்லிவாக்கம், ஐசிஎப் சாலைகளில் கால்நடைகளால் சர்வசாதாரணமாக விபத்து நடக்கிறது. கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் முன்வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விபத்தில் சிக்கும் நாய், மாடுகளை காப்பாற்றவும் முன்வருவதில்லை.

சாலை நடுவே உயிருக்கு போராடும் கால்நடைகள் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதும்போது அவை பலியாவதோடு வாகனத்தில் செல்பவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். சென்னையில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரியாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எழுத்தளவில் மட்டுமே உள்ளது. தெருக்களில் நாய்கள் தொல்லை இருந்தால் அவற்றை பிடிக்க ஆர்வம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், மாடுகளை பிடிப்பதில்லை. அம்பத்தூர் 7வது மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூர் பகுதியில் 83,84 வார்டுகளில் நாய்கள் தொல்லைகள் மட்டுமின்றி மாடுகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்துகிடக்கிறது.

கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் காய்கறிகள் விற்பனை செய்பவர்கள் அதன் கழிவுகளை சாலையிலேயே கொட்டுகின்றனர். இதை மாடுகள் தின்றுவிட்டு பேருந்து நிலையத்திலேயே  படுத்துகொள்கின்றன. எனவே, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர் பகுதிகளில் உலாவரும்  மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: