பொது இடங்களில் ஆபாச கேள்வி, முகம் சுளிக்கும் செயல்பாடு பிராங்க் நிகழ்ச்சி என்ற பெயரில் எல்லைமீறும் யுடியூப் சேனல்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெரம்பூர்: சமூக வலைதளங்களில் எந்த வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுகிறது, பகிரப்படுகிறது என்பதற்கு ஏற்ற வகையில் குறிப்பிட்ட யு டியூப் சேனலை நடத்துபவர்களுக்கு வருமானம் வரும். இதனால் தங்கள் வீடியோக்களை பார்க்க வைக்க எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கி சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். செக்ஸ் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் குறைவான உடைகளை அணிந்து பெண்கள், மருத்துவர்களிடம் பாலியல் சந்தேகங்களை கேட்பது போன்றும், பல்வேறு பாலியல் சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் விடை அளிப்பது போன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

சாதாரணமாக ஒரு வீடியோவை யு டியூபில் போட்டால் எத்தனை பேர் பார்ப்பார்களோ அதைவிட ஆயிரக்கணக்கான நபர்கள் இதுபோன்ற வீடியோக்களை தேடிப் பிடித்து பார்த்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் யு டியூப் சேனல்களின் கையில் பிராங்க் எனப்படும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பிராங்க் நிகழ்ச்சிக்கள் ஆரம்ப காலகட்டத்தில் மேலை நாடுகளில் மற்றவர்கள் சிரிக்க வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி. தற்செயலாக நடந்து வரும் நபர் திடீரென்று ஒரு சம்பவத்தை எதிர்கொண்டு அவர் அந்த நேரத்தில் எப்படி தனது நிலையை மற்றவர்களுக்கு காட்டுகிறார் என்பதை விளக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.

பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் வருபவர்களும், அதனை பார்ப்பவர்களும் நிகழ்ச்சி முடிந்தவுடன் சிரித்துக் கொண்டே செல்வார்கள். இதை பின்பற்றி நமது ஊரில் பிராங்க் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆபாச செயல்களில் ஈடுபட்டு முகம் சுளிக்க வைக்கின்றனர். தமிழகத்தில் பிராங்க் நிகழ்ச்சிகளுக்கு என்று தனியாக எண்ணற்ற யு டியூப் சேனல்கள் வந்துவிட்டன. இதுபோன்ற சேனல்கள் பார்வையாளர்கள், பின்தொடர்பவர்கள், லைக், ஷேர், கமெண்ட்ஸ், சப்ஸ்க்ரைபர் என்ற 6 விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

இதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், இதில் கலந்து கொள்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல், தங்களது யு டியூப் சேனல்களை வளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவர்களது செயல்பாடுகள் உள்ளன. இதனால் ஆரம்ப காலகட்டத்தில் மற்றவர்களை சிரிக்க வைக்க ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது பலரையும் முகம் சுளிக்க வைத்து சிலரை அழ வைத்துக் கொண்டு இருப்பது வேதனை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பிராங்க் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நபர் தனது செல்போனில் ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை என்று கூறி அவ்வழியாக வருபவரிடம் ஹெட் போனை வாங்கி பேசும்போது, கோபத்தில் அதனை அறுத்துவிட்டு சாரி, என கூறுவார். சிறிது நேரம் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு அதன் பிறகு புதிய ஹெட்போனை பரிசளிப்பார்கள்.

இதை ஏற்காத ஒரு பெண் ஹெட்போனை அறுத்த நபரின் கன்னத்தில் ஓங்கி அடித்து விட்டு, எனது கணவர் இறந்து விட்டார். அவரது நினைவாக இந்த ஹெட்போனை வைத்திருந்தேன் என்று கூறிவிட்டு செல்வார். இதேபோல பானி பூரி சாப்பிடும் இடத்தில் ஒரு பெண் அடுத்தவர் தட்டில் இருந்து பானிபூரி எடுத்து சாப்பிடுவார். அப்போது டென்ஷன் ஆன வாலிபர் ஒருவர் அந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அடிப்பார். இந்த நிகழ்வுகள் பொதுமக்களை மிகவும் பாதித்த பிராங்க் நிகழ்ச்சிகளாக வலம் வந்தன. சமீப காலமாக ஒரு இளம்பெண் அல்லது ஒரு வாலிபர் பொது இடத்தில் இளம்பெண்கள் அல்லது இளைஞர்கள் அருகில் அமர்ந்து, செல்போனில் தனது காதலி அல்லது காதலனுடன் மிகவும் ஆபாசமாக பேசுவதும், அதை பார்த்து இளைஞர்கள் சிரிப்பதுமான பிராங்க் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதற்கு ஒருபடி மேலே, ஒரு கணவர் தனது மனைவி பிறந்தநாள் அன்று கோயிலுக்கு கிளம்பும்போது ஒரு நபரை வரவழைத்து, அவருக்கும் தனது மனைவிக்கும் தொடர்பு இருந்தது போல சித்தரித்து தனது மனைவியிடம் பேச வைப்பார். சிறிது நேரத்தில் அந்த பெண் கதறி அழுது அவர் யாரென்று தெரியவில்லை என்று தனது கணவரிடம் கூறுவார். நீண்ட நேரம் தனது மனைவியை அழ வைத்த பின்பு, அருகில் உள்ள கேமராவை காண்பித்து இது பிராங்க் நிகழ்ச்சி என்பார்கள். தனது மனைவியை வேறு ஒரு ஆணுடன் சேர்த்து வைத்து பேசும் இந்த வீடியோவை பலர் கண்டித்து கருத்து தெரிவித்து இருந்தனர். இதுபோல் பல விடியோக்களை பிராங்க் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் யு டியூபர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பெண்களிடம் காதல் சொல்வதுபோல் ஆசை வார்த்தைகள் கூறி, அதை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிடுவதாகவும், நகைச்சுவைக்காக முதியவர்களை துன்புறுத்தும் வகையில் தண்ணீர் பாக்கெட்டுகளை எறிந்தும், போதை ஆசாமிபோல் நடித்தும் மன உளைச்சலை ஏற்படுத்தி வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். மேலும், இளம் பெண்களிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டும், அதற்கு எவ்வாறு பதில் சொல்ல வேண்டும் என சொல்லிக்கொடுத்து பேசவைத்தும் யு டியூபர்ஸ் தங்கள் பார்வையாளர்களை அதிகரித்து வருகின்றனர்.

இதே பாணியில் சென்னையில் இளம் பெண்ணிடம் ஆபாச கேள்விகள் கேட்டு பேட்டியெடுத்து பதிவேற்றிய விவகாரம் சர்ச்சையான நிலையில், தனியார் யு டியூப் சேனல் உரிமையாளர் தினேஷ், தொகுப்பாளர் ஆசின் பாத்சா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய 3 பேர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு மோசமான நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அது நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என கருத்து சொல்வதன் மூலம் நாம் அந்த நிகழ்ச்சிக்கு அடிமையாகி விடுகிறோம். எனவே கேவலமான நிகழ்ச்சிகளை முற்றிலுமாக பார்ப்பதை தவிர்ப்பதன் மூலம் யு டியூப் சேனல்கள் நடத்துபவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என்பதே நிதர்சனமான உண்மை.

*5 சேனல்கள் மீது புகார்

சமீபத்தில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர்  அலுவலகத்தில் பிராங்க் வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு வரும் 5 ய டியூப்  சேனல்களை முடக்க வலியுறுத்தியும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது  வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ரோஹித் குமார்  என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். குறிப்பாக கட்டெரும்பு, குல்பி,  ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய 5 யு டியூப் சேனல்கள் பெண்கள்  மற்றும் முதியவர்களை குறிவைத்து அவர்களின் தனிமனித சுதந்திரத்தை கெடுத்து,  இயல்பு வாழ்கையை பாதிக்கும் வகையில் பிராங்க் வீடியோக்களை எடுத்து  அவர்களது சம்மதம் இல்லாமல் பதிவிட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டுவதாக  குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் தொடர்பாகவும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

*போலீசார் எச்சரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிராங்க் வீடியோக்கள் எடுத்து அவர்களது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் யு டியூபர்ஸ் மீது புகார் அளிக்கப்பட்டால் குற்ற வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களது யு டியூப் சேனல்கள் முடக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே பிராங்க் வீடியோக்கள் மீது அதிகப்படியான புகார்கள் குவிந்து வரும் நிலையில், சைபர் கிரைம் போலீசார் சம்மந்தப்பட்ட யு டியூப் சேனல்களை கண்காணித்து அத்துமீறல்களில் ஈடுபடும் சேனல்களின் பட்டியலை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*பெண்களுக்கு வலை

சிலர் எந்தவித யு டியூப் சேனலையும் நடத்தாமல் ஒரு நாள் மட்டும் கேமராவை வாடகைக்கு எடுத்து வந்து குறிப்பிட்ட இடங்களில் கேமராவை செட் செய்துவிட்டு அழகான பெண்கள் வரும்போது அவர்களிடம் தங்களது காதலை சொல்வது போலவும், நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று கவர்ச்சியாக பேசுவது போலவும் செய்கின்றனர். அவர்கள் அதற்கு எந்த மாதிரியான பதிலை தருகிறார்கள் என்பதை வைத்து அடுத்த கட்ட நகர்வுக்கு செல்கின்றனர். அவர்கள் கோவப்பட்டு அடிக்க வந்தாலோ அல்லது போலீசுக்கு போன் செய்தாலோ உடனே அருகில் உள்ள கேமராவை காட்டி நாங்கள் பிராங்க் நிகழ்ச்சி செய்கிறோம். சாரி எனக் கூறிவிட்டு அந்த பெண்ணை அனுப்பி வைத்து விடுகின்றனர். இல்லை என்றால் அந்தப் பெண் இவர்களது பேச்சில் மயங்கி சிறிது பேச்சு கொடுத்தால் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு அதன் பின்பு தங்களது ஆசை வலையில் விழ வைத்து தங்களுக்கு தேவையானதை சாதித்துக் கொள்கின்றனர்.

Related Stories: