நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுபாதுகாப்பு அதிகாரி ஆய்வு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புலிபுரக்கோவில் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதன்பின்னர் நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது; தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய விலையில் நெல் கொள்முதல்  நடைபெறுகிறது. தற்போது தமிழகத்தில் 492 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களை நிரந்தரமாக ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது 109 இடங்களில் 10 லட்சம் டன் நெல் மூட்டைகள் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. இதை மாற்ற முதல்வர் 238 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் 20 இடங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் நபார்டு வங்கி உதவியுடன் சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும். இதன் மூலம் மழைக் காலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு கூறினார்.

இதையடுத்து சிலாவட்டம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு நெல்லை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், கூட்டுறவு இணை பதிவாளர் லட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சத்தியதேவி உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: