கால்வாய் தூர்வாரும் பணி செய்யாத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை வேண்டும்: மணலி மண்டல குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டல மாதாந்திர வார்டு கூட்டம் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. உதவி ஆணையர் கோவிந்தராஜ், செயற்பொறியாளர் காமராஜ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வார்டுகளில் நடைபெற வேண்டிய மக்கள் நல பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 22வது வார்டு கவுன்சிலர் தீர்த்தி எழுந்து, சின்னசேக்காடு பகுதியில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் செய்யாமல் கிடப்பில் விட்டதால் கழிவுநீர் வெளியேறி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படுகிறது. இதுபோன்ற ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதே கருத்தை 18வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர் வலியுறுத்தினார்.

இதற்கு, தலைவர் ஏ.வி.ஆறுமுகம் பதிலளிக்கையில், ‘‘மழைநீர் தங்கு தடை இல்லாமல் கால்வாய்களில் செல்வதற்காக கால்வாய்களை சீரமைக்கவும், புதிய கால்வாய்களை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை சரியாக செய்யாத சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பதிலாக புதிய ஒப்பந்ததாரர் நியமித்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார். தொடர்ந்து, கவுன்சிலர்கள் முல்லை ராஜேஷ் சேகர், நந்தினி, ராஜேந்திரன் ஆகியோர் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து ரூ10 கோடி மதிப்பிலான பணிகள் செய்ய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

Related Stories: