குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை சென்னையில் 433 ரவுடிகளிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை: நன்னடத்தை பிணைப்பத்திரம் 30 பேர் எழுதி கொடுத்தனர்

சென்னை: குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 433 ரவுடிகளை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் 30 பேர் நன்னடத்தை பிணைப்பத்திரம் எழுதி கொடுத்து சென்றனர். சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி ‘குற்றங்களுக்கு எதிரான ரவுடிகள் ஒழிப்பு’ மூலம் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 13ம் தேதி  சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 433 ரவுடிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சட்டம்- ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த வழக்கில் தேடப்பட்டுள்ள 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 381 சரித்திர பதிவேடு ரவுடிகளை பிடித்து கடுமையாக எச்சரித்து, இனி குற்ற செயல்பகளில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. 30 ரவுடிகள் இனி எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டோம் என்று அந்தந்த துணை கமிஷனர்கள் முன்பு நன்னடத்தை பிணைப்பத்திரம் எழுதி கொடுத்து சென்றனர். இந்த ரவுடிகள் ஒழிப்பு சிறப்பு தணிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: