ராயப்பேட்டை பூங்கா அருகே 6.3 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: ராயப்பேட்டை பூங்கா அருகே கஞ்சா விற்பனை செய்த ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்காக்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை ‘போதைப் பொருள் தடுப்புக்கான நடவடிக்கை’ மூலம் கைது செய்ய போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீசார் கஞ்சாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே ராயப்பேட்டை திருவிக சாலையில் உள்ள பூங்கா அருகே சிலர் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணா சாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, கடந்த 13ம் தேதி போலீசார் சாதாரண உடையில் திருவிக சாலையில் உள்ள பூங்கா அருகே கண்காணித்தனர். அப்போது, 3 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்தனர். இதை கவனித்த போலீசார் 3 பேரையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 6.3 கிலோ கஞ்சா சிறு சிறு பொட்டலங்களாக இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சிவகாமி அம்மன் காலனியை சேர்ந்த சரத் (எ) சரத்குமார் (29), செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த அப்பு (28), எருக்கஞ்சேரி இந்திரா காந்தி நகர் 2வது தெருவை சேர்ந்த அருண் (31) என தெரியவந்தது. உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பிரபல ரவுடியான சரத்குமார் மீது 2 கொலை, 2 கொலை முயற்சி உள்பட 11 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: