நீர்நிலைகளுக்கு அருகில் உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதிப்பதை ஆய்வு செய்ய குழு: சிஎம்டிஏ நடவடிக்கை

சென்னை: நீர்நிலைகளுக்கு அருகில் உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதிப்பது ெதாடர்பாக ஆய்வு செய்ய சிஎம்டிஏ குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. சென்னையில் நீர்நிலைகள் அருகே உயரமான கட்டிடங்கள் விரைவில் வரலாம் மற்றும் ஆக்கிரமிப்பு மீண்டும் செய்யப்படலாம். இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் விதிகளை மாற்றவும் மற்றும் தரை இட குறியீட்டை அதிகரிக்கவும் அறிவியல் ரீதியிலான ஆய்வு மேற்கொள்ள ஒரு குழுவை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைத்துள்ளது. தற்போது, ​​நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் மட்டுமே கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நீர்நிலைகளில் இருந்து தரை இடைவெளியானது (எப்எஸ்ஐ) அதிகபட்சமாக 0.8 என்ற அளவில் இருக்க வேண்டும். இந்நிலையில் இந்திய புவியியல் ஆய்வு நிபுணர்களை உள்ளடக்கிய குழு மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் எப்எஸ்ஐ அளவை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிலத்தடி நீர் அதிகம் உள்ள பகுதிகள் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் உள்ளது.

சில பில்டர்கள் கூறுகையில், ‘இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால் சிஎம்டிஏவானது எப்எஸ்ஐயை அதிகரிக்க அறிவியல் பூர்வமாக படிப்பது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு நல்லது. எப்எஸ்ஐயின் அதிகரிப்பு நகரத்திற்கு நெருக்கமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்றார்.

இதுதொடர்பாக சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இதுதொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நாங்கள் முடிவு செய்யலாம்’ என்றார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘இந்த முடிவு மிகவும் அபாயகரமானது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். கோவளம் மழைநீர் வடிகால் திட்டம் அந்த பகுதியில் வளர்ச்சியை அதிகரிக்க ஒருவழியாக இருந்தது. இப்போது, சிஎம்டிஏ விதிகள் மாற்றத்திற்கு வருகிறது. இப்பகுதியில் ஏற்கனவே அடர்த்தியான மக்கள்தொகை உள்ளது மற்றும் அதிகரித்து வரும் எப்எஸ்ஐ மேலும் மேலும் மக்கள் தொகையை அதிகரிக்கும். சென்னை ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சமீபத்திய பெங்களூரு வெள்ளம் ஆகியவற்றில் இருந்து மாநிலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: