திருத்தணி காந்தி ரோடு ரயில் நிலைய சாலையில் கழிவுநீரால் மக்கள் தவிப்பு; ரயில்வே நடவடிக்கை எடுக்குமா?

திருத்தணி: திருத்தணி காந்தி ரோடு சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவிகளும் மக்களும் தவிக்கின்றனர். இவற்றை அகற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மபொசி. சாலை, அக்கையா நாயுடு சாலை, கடப்பா ட்ரங்க் ரோடு, சித்தூர் சாலை பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கி வருகின்றன. திருத்தணி நகராட்சி கழிவுநீர் கால்வாய் அடியில் ரயில்வே தண்டவாளம் போடப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் காந்தி ரோடு, கலைஞர் நகர், முருகப்ப நகர் வழியாக வெளியேறுகிறது. திருத்தணி காந்தி ரோட்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே திருத்தணி ரயில் நிலையத்துக்கு சாலை செல்கிறது.

இந்த சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்வதால் கழிவு நீர் கால்வாய் மீது ரயில்வே ஸ்லீப்பர் சிமெண்ட் கற்களை போட்டு மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவ்வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் வெளியேற முடியாமல் கால்வாயை அடைத்துக்கொண்டு சாலையின் மேற்பரப்பில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். சிறிய அளவு மழை பெய்தால்கூட கழிவு நீர் பள்ளியின் வளாகத்திற்குள் சென்று விடுகிறது. இதன்காரணமாக மாணவ, மாணவிகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ‘’ரயில்வே நிர்வாகம் உடனடியாக ரயில்வே ஸ்லீப்பர் கட்டைகளை அகற்றி கழிவுநீர் எளிதாக செல்லும் வகையில் கான்கிரீட் அமைக்க வேண்டும்’’ என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: