குமாரபாளையத்தில் சாக்கடை கால்வாயில் பெருக்கெடுக்கும் சாயக்கழிவுகள்-கோம்புபள்ளம் வழியாக காவிரியில் சங்கமம்

குமாரபாளையம் : சாக்கடையில் பெருக்கெடுக்கும் சாயக்கழிவுகள், கோம்புபள்ளத்தில் வழிந்தோடி காவிரி ஆற்றில் கலந்து மாசுப்படுத்துகின்றன.குமாரபாளையத்தில் 30க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள், துணிகளையும் நூல்களையும் சாயமிடும் அனுமதியை பெற்றுள்ளன. இந்த ஆலைகளில் இயந்திரங்கள் மூலம் சாயமிடப்பட்ட பின் உள்ள ரசாயன கழிவுகளை அதற்கான தொட்டிகளில் நிரப்பி சாயம், உப்பு நீக்கி மீண்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் துணிகளில் கறை நீக்கி வெண்மைப்படுத்தி அனுப்பும் பணியில் சுமார் 25 சலவைப்பட்டறைகள் இயங்கி வருகின்றன.

சலவைக்கு அனுமதி பெற்றிருந்தாலும் பெரும்பாலான பட்டறைகள் சாயமிடும் பணியில்தான் ஈடுபட்டுள்ளன. பகல் முழுவதம் சாயத்தண்ணீரை தேக்கி வைத்து, இரவில் அப்படியே சாக்கடையில் வெளியேற்றி ஆற்றையும், சுற்றுப்புற காற்றையும் மாசுப்படுத்தும் பணியில் மீண்டும் சாயப்பட்டறைகள் ரகசியமாக துவங்கி விட்டன. குமாரபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே இயங்கும் பல சாயப்பட்டறைகளில் இரவு நேரத்தில் கழிவுநீர் திறந்து விடப்படுவதால், அதிலிருந்து கிளம்பும் பிளீச்சிங் நெடி காற்றில் பரவி சுவாசிக்கும் காற்றை விஷமாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். சாக்கடையில் வெளியாகும் சாயக்கழிவுகள் கோம்பு பள்ளத்தில் வழிந்தோடி காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கிறது.

கடந்த 2 மாதங்களாக காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் வெளியேறுவதால், இங்குள்ள சாயப்பட்டறைகள் கழிவுகளை சுதந்திரமாக வெளியேற்றுவதாக குற்றம் சாட்டினர். மாசுகட்டுப்பாட்டு துறையில் போதிய கண்காணிப்பு இல்லாததால், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் இருந்து பகல் நேரத்திலும் சாயக்கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதனால் மகளிர் மேல்நிலைப்பள்ளி சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளில் மாலை நேரத்தில் மக்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் அடைத்துவிட்டு காற்றுபுகாத வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.அருகில் திருவள்ளுவர் காலனியில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகார் செய்தாலும் ஒரு நடவடிக்கையும் இல்லை என வருத்தப்பட்டனர்.

Related Stories: