காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளுக்கு 280 ரத்த அழுத்த பரிசோதனை கருவி: கமிஷனர் வழங்கினார்

சென்னை: காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளுக்கு 280 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வழங்கினார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுரைப்படி, சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரிகள், போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தனியார் அமைப்பினர் சென்னை  காவல்துறைக்கு ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை வழங்க முன்வந்தனர்.

அதன்படி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போலீசார் தங்களது உடலின் ரத்த அழுத்தத்தை தாமே பரிசோதித்துக்கொள்ள வசதியாக சென்னை பெருநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள்  வழங்கும் அடையாளமாக 280 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வழங்கினார்.

இந்த ரத்த அழுத்த பரிசோதனை கருவி மூலம் போலீசார் தங்களது ரத்த அழுத்த நிலையை அன்றாடம் பரிசோதித்துக் கொண்டு, உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், குறைபாடுகள் ஏதேனும் கண்டறிந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு தங்களது உடல்நிலையை பாதுகாக்கவும் பயன்படும். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் லோகநாதன்,  துணை ஆணையர் ராமமூர்த்தி, தனியார் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜார்ஜி ஆப்ரஹாம், இவ்வமைப்பின் நிர்வாகிகள், காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: