வேதாந்தா சிப் தொழிற்சாலை ஏமாந்தது மகாராஷ்டிரா; தட்டி பறித்தது குஜராத்: ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு

காந்திநகர்: வேதாந்தா நிறுவனமும், தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனமும் குஜராத்தில் செமிகன்டக்டர் சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தம் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் முன்னிலையில் கையெழுத்தானது. இது குறித்து வேதாந்தா தலைவர் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்திலும் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தப்படி, இந்த நிறுவனங்கள் ரூ.1.54 லட்சம் கோடியை முதலீடு செய்கின்றன. இதன் மூலம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, குஜராத் முதல்வர் பூபேந்திர் படேல் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் அருகே இந்த தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. சிப் தொழிற்சாலை அமைக்கப்படும் மாநிலம் 99 ஆண்டு குத்தகைக்கு ஆயிரம் ஏக்கர் நிலம், 20 ஆண்டுகளுக்கு குறைந்த கட்டணத்தில் தண்ணீர், மின்சாரம் வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் ஏற்கனவே கோரியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் சிப் தொழிற்சாலை அமைக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது இந்த வாய்ப்பு குஜராத்துக்கு சென்று விட்டது. இந்த செமி கன்டக்டர் சிப்கள் எனப்படும் மைக்ரோ சிப்கள் கார், மொபைல் போன்கள், ஏடிஎம் கார்டு போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

Related Stories: