திருத்தணி கோட்ட ஆறுமுகசுவாமி கோயில் உள்பட உப கோயில்களுக்கு செல்லும் சாலையில் பாம்பு, தேள் உலா; பக்தர்கள் அதிர்ச்சி

திருத்தணி: திருத்தணி உள்ள உப கோயில்களுக்கு செல்லும் பாதையில் பாம்பு, தேள்கள் வருவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் 26 உப கோயில்கள் இயங்கி வருகிறது. இந்த கோயில்களில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் மேற்பார்வையில், நடைபெற்று வருகிறது. உப கோயிலான திருத்தணி நந்தியாற்றின் கரையில் உள்ள கோட்டை ஆறுமுக சுவாமி கோயில், விஜயராகவ பெருமாள் கோயில், விஜயலட்சுமி தாயார் கோயில், ஆஞ்சநேயர் கோயில், நாகாளம்மன் கோயில், பைரவர் கோயில் மற்றும் விநாயகர் சன்னதிகள் அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைத்துள்ளனர்.

இந்த கோயில்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது மேற்கண்ட கோயிலுக்கு செல்ல சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் சாலையின் இரண்டுபுறமும் காட்டு செடிகள் வளர்ந்து புதர்போல் மண்டிக் கிடக்கிறது. மேலும் சாலையில் விளக்கு வெளிச்சம் கிடையாது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்லும்போது புதரில் இருந்து பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வந்து மிரட்டுகிறது. இந்த சாலையில் நடந்து செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, சாலையில் உள்ள காட்டு செடிகளை அகற்றி பக்தர்கள் அச்சமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: