ஏற்காடு மலைக்கிராமத்திற்கு பஸ் இயக்க வலியுறுத்தி சொந்த பணத்தில் சாலை அமைப்பு-கிராம மக்களே சீரமைத்தனர்

ஏற்காடு : ஏற்காட்டில் செங்கலூத்துபாடி கிராமத்தில் பஸ் இயக்க வலியுறுத்தி, கிராம மக்கள் பணம் சேகரித்து, குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்துள்ளனர்.

ஏற்காட்டில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்மநத்தம் ஊராட்சி செங்கலூத்துப்பாடி கிராமத்தில், சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 வாரங்களாக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை தாசில்தார், பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு வழங்கியும் பஸ் இயக்கப்படவில்லை.

இதையடுத்து, அதிகாரிகளை சந்தித்து கேட்டபோது, செங்கலூத்துப்பாடி கிராமத்திற்கு சரிவர சாலைகள் இல்லாததால் தான், பஸ்கள் இயக்கப்படவில்லை என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ஊர்மக்கள் ஒன்றுகூடி தாங்களே சாலையை அமைக்க முடிவு செய்தனர். இதற்காக ஊர்மக்களிடம் பணம் சேகரித்து, கிராமத்திற்கு சாலையை தாங்களாகவே அமைத்து வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘சுமார் 3 கிலோமீட்டர் தார் சாலையில், சிறிது சேதமடைந்ததால் பஸ் இயக்க மாட்டோம் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

எனவே, எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, நாங்களே 3 கி.மீட்டர் தூரத்திற்கு குண்டும், குழியுமாக இருந்த சாலையை சீரமைத்துவிட்டோம். இனியாவது பஸ்களை எங்கள் கிராமத்திற்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, செங்கலூத்துப்பாடி கிராமத்திற்கு உடனடியாக பஸ் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: