கல்குவாரிக்கு எதிராக போலி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில், கல்குவாரி உரிமையாளர் மனு

திருப்பூர் : கல்குவாரிக்கு எதிராக போலியாக போராட்டம் நடத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.திருப்பூர் அருகே கோடாங்கிபாளையத்தில் கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவாயிலை நேற்று முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கோடாங்கிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள்  செயல்பட்டு வருகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோடாங்கிபாளையத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரிக்கு தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. விவசாயத்துக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமல், அரசின் விதிகளோடு செயல்பட்டு வரும் கல்குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை நம்பி உள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இந்த தொழில் மூலம் கிடைக்கும் மூலப்பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், ஹாலோ பிளாக், பி.சாண்ட், மெட்டல், போல்டர், சோலிங் கற்கள் போன்றவை கிடைப்பதால் தான் கட்டுமானத் தொழிலாளர்கள் கொத்தனா, சித்தாள், கட்டிட மேஸ்திரி, எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்ற தொழில்களும் செய்ய முடிகிறது. கல்குவாரிகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தின் நுழைவாயிலில் நடந்த முற்றுகை போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால், அவர்களை கலெக்டர் அலுவலகத்துக்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி அவரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  அதே போல், முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல் குவாரிக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி விவசாய அமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான இச்சிப்பட்டி, கோடாங்கிபாளையம், 63 வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன.  கல்குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் வெடிமருந்துகளை சட்டவிரோதமாக கடத்தல் சந்தையில் வாங்கி அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக ஆழத்தில் குழிகளை தோண்டி சட்டவிரோதமாக வெடிமருந்துகளை கொண்டு குவாரிகளை இயக்கி வருகிறார். இதனால் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடிநீர்மட்டம்  பாதிக்கப்படுகிறது.

 போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.  கல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும். குவாரி உரிமையாளர்கள், ஜல்லி அரவை உரிமையாளர்கள், எம்.சாண்ட் யூனிட் உரிமையாளர்கள் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து, கடத்துகிறார்கள். இதனால் அரசுக்கு ரூ. 600 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி கொடுத்த மனுவில்: அலகுமலை ஊராட்சியில் அலகுமலை குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உள்ள முன்புறம் மைதானத்தில் மழைநீர் மழைக்காலங்களில் தேங்கி வருகிறது. இதனை சரி செய்ய மண்ணை கொட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து மண்ணை எடுத்து கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும். என்றிருந்தார்.

அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருப்பூர் மாவட்ட குழுவினர் கொடுத்த மனுவில்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நுண் நிதி நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிக்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இந்த நபர்கள் கடன் வாங்கியவர்களிடம் கடன் தொகை திரும்ப செலுத்த காலதாமதம் ஆனாலும், தவணை தொகை தவறினாலோ, அதிக வட்டி வசூலிப்பதும், அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதும் நடந்து வருகிறது. இதற்கு சான்றாக ராஜேஷ் கண்ணன் என்பவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எனவே அதிக வட்டி கேட்டு மிரட்டு நுண் நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேஷ் கண்ணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். என்றிருந்தனர்.

Related Stories: