திருவள்ளூர் ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 1வது நடைமேடையில் லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும்  என்று பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மற்றும் காட்பாடி, திருப்பதி , மும்பை, பெங்களூர், விரைவு ரயில்களும், மின்சார புற நகர் ரயில்கள் என நாள் ஒன்றுக்கு 200 க்கும் மேற்பட்ட ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சம்  பேர் வரை திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.  இதனால்  ஆண்டுக்கு ரூ.15 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.  

திருவள்ளூரிலிருந்து சென்னைக்கும், அரக்கோணத்திற்கும் செல்லும் ரயில்கள் அதிகளவில் பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரயில் நிலையமாக இந்த திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், அதே போல் மாலை 4 மணி முதல் 10 மணி வரையிலும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகளில் இரு புறமும் மேம்பாலம் இருந்தும் ஒரு சிலரைத் தவிர ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் என அனைத்து பொதுமக்களும் ரயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்கின்றனர். இதனால் அடிக்கடி ரயில்கள் மோதி விபத்துக்களும், அதனால் உயிரிழப்பும்  ஏற்படுகிறது. இதனால் கடந்த 2019 ல் எஸ்கலேட்டர் வசதியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு 2021 ல் அதற்கான பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

2 மற்றும் 3 வது நடைமேடையில் மட்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 1 வது நடைமேடையிலும் அமைக்காமல் அதற்கான ஆரம்பப் பணிகள் கூட இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது. 2 மற்றும் 3 வது நடைமேடையில் விரைவு ரயில்கள், மற்றும் அதி விரைவு ரயில்கள் மற்றும் சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில்கள் ஆகியவற்றில் வரும் பயணிகள் எஸ்கலேட்டரில் ஏறி செல்கின்றனர்.  ஆனால் ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்ல 1 வது நடைமேடையில் தானியங்கி நடைமேடை வசதி இல்லாததால் பெரும்பாலானாவர்கள் நடைமேடையில் சென்று ஆபத்தான முறையில்  ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லக் கூடிய நிலை உள்ளது. எனவே பயணிகள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: