திருத்தணி அரசினர் கலை கல்லூரியில் அனைத்து பிரிவு காலியிடங்களும் நிரம்பியதால் மாணவர்கள் மறியல்: கூடுதல் இடம் ஒதுக்க கோரிக்கை

சென்னை: திருத்தணி  அரசினர் கலை கல்லூரியில் அனைத்து பிரிவு இடங்களும் நிரம்பிவிட்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது கல்லூரியில் இந்த ஆண்டு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, மேதினிபுரம் பகுதியில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. நடப்பு  கல்வி ஆண்டுக்கான இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு  முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று  கலந்தாய்வுக்கு வந்த மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் அனைத்து பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரம்பி விட்டதாக  தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர்  சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடப்பாண்டில்  கல்லூரியில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து மாணவர்கள் படிக்க  கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அப்போது போராட்டக்காரர்கள் கூறும்போது, `இந்த ஆண்டு மொத்த மாணவ, மாணவிகள் ஐந்தாயிரம் பேர் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 686 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. பலரும் கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு வெளியூர் சென்று படிக்கின்ற வசதி கிடையாது. எனவே இனி வரும் காலங்களில் மாலை நேரக் கல்லூரி தொடங்கினால் கூடுதலாக மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். எனவே தமிழக அரசு திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராம புற பெற்றோர்களின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று கூறினர்.

இந்த திடீர் சாலை மறியலால்  4 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து விரைந்து வந்த திருத்தணி ஆர்டிஓ அசரத் பேகம், கல்லூரி முதல்வர் பூரணச்சந்திரன், தாசில்தார் வெண்ணிலா,  திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்ட் (பொறுப்பு) குமரவேல், திருத்தணி வருவாய் ஆய்வாளர் யாசர் அராபாத், கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை  கைவிட்டனர். மாணவர்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: