முகச்சிதைவு நோயால் பாதித்த சிறுமி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: படிப்பு செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் அறிவிப்பு

சென்னை: முகச்சிதைவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஆவடி சிறுமி டான்யா முழு குணமடைந்து வீடு திரும்பினார். ஆவடி அருகே வீராபுரம் மோரை பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்டீபன்ராஜ்- சவுபாக்கியா. இவர்களது மகள் டான்யா. வீராபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார். இந்நிலையில், முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.சிறுமியின் நிலை குறித்து, ‘தினகரன்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமி டான்யா சிகிச்சைக்கு தேவையான உதவிகளை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்ததுடன் அனைத்து உதவிகளையும் உடனே செய்ய உத்தரவிட்டார். அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் உள்பட பலர் நேரில் சென்று சிறுமிக்கு தேவையான உதவிகளை செய்தனர். தொடர்ந்து, சென்னை அருகே தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் சிறுமிக்கு உடனடியாக முக சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுமிக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி டான்யா முழுமையாக குணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரை வீட்டுக்கு அனுப்பலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் நாசர், சிறுமியை தனது இடுப்பில் தூக்கி வைத்து பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அப்போது சிறுமியின் பெற்றோர், கண்ணீர்மல்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில், மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், பூந்தமல்லி ஒன்றிய திமுக செயலாளர் கமலேஷ், பூந்தமல்லி நகர செயலாளர் வி.ஆர்.திருமலை, பூந்தமல்லி சேர்மன் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், தரன், மகாதேவன் மற்றும் மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் உள்பட பலர் இருந்தனர். பின்னர் அமைச்சர் நாசர் கூறுகையில், ‘‘முழு சிகிச்சை முடிந்து சிறுமி டான்யா வீடு திரும்பினாலும் அவருக்கு மேலும் 6 மாதத்துக்கு தேவையான சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்., அவரது படிப்பு செலவையும் அரசு ஏற்கும்’’ என்றார்.

Related Stories: