சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 13 புறநகர் ரயில் நிலையங்களில் 25 நடைமேடைகள் சீரமைக்க ஒப்பந்தம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 13 புறநகர் ரயில் நிலையங்களில் உள்ள 25 நடைமேடைகள் சீரமைக்க வரும் 14ம் தேதி ஏலம் விடப்படுகிறது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு விரைவு மற்றும் மின்சார ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை மட்டும் பல லட்சங்கள் இருக்கும். சென்னையை பொறுத்தவரை வேலை நிமித்தமாக சில லட்சம் பயணிகள் தினமும் சென்னைக்கு புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சென்னையின் புறநகர் ரயில்களும் எண்ணூர், கும்மிடிப்பூண்டி மற்றும் அம்பத்தூர், திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரை மார்க்கமாகவும், புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 500 மில்லியனுக்கும் கூடுதலான பயணிகள் பயணிக்கின்றனர். மற்ற மண்டலங்களைப் போல் இல்லாமல் தெற்கு ரயில்வேயின் வருமானத்தின் பெரும்பகுதி பயணிகளின் கட்டணம் மூலமாகவே வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வேயில் பெரும் பிரச்னையாக இருப்பது நடைமேடைகள் தான். இது ஸ்டேஷன்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. சில இடங்களில் நடைமேடைள் தாழ்வாகவும், சில இடங்களில் நடைமேடைகளின் நீளம் குறைவாகவும் உள்ளது. இதனால், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, முதல் கட்டமாக 13 ரயில் நிலையங்களில் நடைமேடைகளை சர்வதேச தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்டு 25 நடைமேடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே அதிகாரி கூறியதாவது : சென்னை  ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் நடைமேடைக்கும், ரயில்  படிக்குமான இடைவெளி சற்று அதிகமாக இருப்பதால், பயணிகள் சிரமப்படுவதாக  புகார்கள் வந்தன. எனவே, சென்னை எழும்பூர்-விழுப்புரம் மார்க்கத்தில்  செங்கல்பட்டு, கிண்டி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, மீனம்பாக்கம்,  நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கூடுவாஞ்சேரி, மாம்பலம், பெருங்களத்தூர்,  வண்டலூர், திண்டிவனம் உள்ளிட்ட 13 நிலையங்களில் உள்ள 25 நடைமேடைகளில்  சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமேடைகளில்  அரைஅடி முதல் இரண்டு அடி வரை நடைமேடை உயரம் அதிகரிக்கப்படும். இந்த  பணிக்காக ரூ3 கோடி நிதி செலவிடப்பட உள்ளது. இப்பணிகளை 11 மாதங்களில்  முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த மாதம் 26ம் தேதி டெண்டர்  கோரப்பட்டது. வரும் 14ம் தேதி ஏலம் தொடங்கும். வரும் 28ம் தேதி  ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. அதன் பிறகு பணிகள் தொடங்கும் என ரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: