நாய் பிடிப்போர் மக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்: கமிஷனர் ககன்தீப் சிங்பேடி அறிவுறுத்தல்

சென்னை,: நாய் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சி, கால்நடை மருத்துவ பிரிவின் சார்பில் பிராணிகள் நல தன்னார்வலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் ஆணையர் ககன்தீப் சிங்பேடி பேசியதாவது: சென்னையில் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 57,366 தெருநாய்கள் உள்ளன. சென்னையில் ஏற்கனவே புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய மூன்று இடங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் கூடுதலாக இரண்டு மையங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்களும், ஒவ்வொரு வாகனத்திலும் 5 பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவர் உள்ளனர். நாய்களை பிடிப்பதற்காக 64 வலைகள் உள்ளன. நாய்களை பிடிக்கும் பொழுது பணியாளர்கள் மனிதாபிமானத்துடன் நாய் இன கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி பிடிக்க வேண்டும். வலைகளை பயன்படுத்தி மட்டுமே நாய்களை பிடிக்க வேண்டும்.

நாய்களை துன்புறுத்தக்கூடிய வகையில் கயிறு மற்றும் இதர உபகரணங்களை கொண்டு பிடிக்கக் கூடாது. நாய் பிடிக்கும் வாகனங்களை அவ்வப்பொழுது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு சீருடை, கையுறைகள் உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாய் பிடிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பொதுமக்களிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: