கனமழை காரணமாக மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

உதகை: கனமழை காரணமாக உதகையிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு சாலையின் மீது விழுந்ததால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை நடுவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உதகையிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் மலைப்பாதையில் நள்ளிரவு மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையின் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் உதகையிலிருந்து கூடலூர், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மழை காரணமாக நடுவட்டம் பகுதியில் சாலையில் விழுந்த பாறைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் கோட்டக் பொறியாளர் பிரேம் தலைமையில் நள்ளிரவு சாலையில் விழுந்த மண்சரிவுகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர், அப்போது அவ்வழியாக சென்று சுற்றுலா பயணிகள் நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து சாலையில் விழுந்த பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பின் மூன்று மாநில போக்குவரத்தானது துவங்கியது.

Related Stories: