படப்பிடிப்புக்கு கேரளா செல்வதால் கனல் கண்ணன் ஜாமீன் நிபந்தனை 8 நாட்கள் நிறுத்திவைப்பு

சென்னை: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படப்பிடிப்பிற்காக கேரளா செல்வதால், சென்னை காவல்துறை முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற ஜாமீன் நிபந்தனையை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடந்த இந்து முன்னணி விழாவில் பேசிய மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன்,ரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினரால் ஆகஸ்ட் 15ம் தேதி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 4 வாரங்களுக்கு இரு வேளையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால் ஜாமீன் நிபந்தனைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை இன்று முதல் 17ம் தேதி வரை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் செப்டம்பர் 18ம் தேதி முதல் விசாரணை அதிகாரி முன்பு மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: