கிழக்கு லடாக்கில் உள்ள காக்ரா பகுதிகளில் இருந்து இந்திய, சீன ராணுவம் வாபஸ்; 16-ம் சுற்று பேச்சு ஒப்பந்தததால் பலன்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள காக்ராவில் இருந்து இந்திய, சீன ராணுவங்கள் நேற்று மாலை  முதல்  திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கு சொந்தமான  எல்லை பகுதிகளை கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் சீன ராணுவம் ஆக்கிரமிக்க முயற்சித்தது. இந்திய வீரர்கள் இதை தடுத்தபோது, மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து,  எல்லையில் இருநாட்டு ராணுவமும் படைகளை குவித்ததால் போர் பதற்றம்  ஏற்பட்டது. இந்நிலையில், இந்த பதற்றத்தை  தணிக்க இருநாட்டுக்கும் இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் பலனாக, கடந்தாண்டு பாங்காங் ஏரி பகுதியின் வடக்கு, தெற்கு கரைகளில் குவிக்கப்பட்டு இருந்த இருநாட்டு ராணுவமும் திரும்பப் பெறப்பட்டது. மற்ற இடங்களில் இருந்தும் ராணுவத்தை  திரும்பப் பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில், கடந்த ஜூலையில் நடந்த 16ம் சுற்று பேச்சில், காக்ரா -ஹாட்ஸ் ஸ்பிரிங் பகுதியில் இருந்து படிப்படியாக ராணுவத்தை திரும்ப பெற ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி. இந்த இடத்தில் இருந்து இருநாட்டு ராணுவமும் நேற்று முதல் திரும்ப பெற தொடங்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய பலனாக இது கருதப்படுகிறது. மேலும், இந்த முன்னேற்றத்தின் மூலம் லடாக் எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே அமைதியான சூழலை ஏற்படுத்த வழி ஏற்படும் என்று இந்திய, சீன ராணுவங்கள் நேற்றிரவு வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: