ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கருஞ்சட்டை பேரணி; கோட்டைக்கு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்

சென்னை: ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கருஞ்சட்டைப் பேரணி நேற்று நடந்தது. கோட்டை நோக்கி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழக அரசு வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று, ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையில், ஆயுள் சிறைவாசிகளையும், 6 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டைப் பேரணி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று நடந்தது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, செயலாளர்கள் ரத்தினம், ஏ.கே.கரீம், அபுபக்கர் சித்திக், நஜ்மா பேகம், பொருளாளர் அமீர் ஹம்சா முன்னிலை வகித்தனர்.

சென்னை எழும்பூரில் இருந்து பேரணி புறப்பட்டது. விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி, தமிழ்தேச விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, என்.சி.எச்.ஆர்.ஓ. மாநில தலைவர் மோகன், ஜம்மியத் உலமாயே ஹிந்த் செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். எழும்பூர் அசோகா ஓட்டலில் இருந்து தொடங்கிய பேரணியை ராணி மெய்யம்மை திருமணம் மண்டபம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரணியில் பெண்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: