பெரம்பூர் தொகுதி 71வது வார்டில் காலதாமதமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

பெரம்பூர்: பெரம்பூரில் இரண்டரை மாதங்களாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் ஆண்டுதோறும் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்யவும் பொதுமக்கள் மழைக்காலங்களில் அவதிக்குள்ளாகாமல் இருக்கவும் சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை அவ்வப்போது அமைச்சர்கள் மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒப்பந்தக்காரர்களை நியமித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக நடைபெற்ற பணிகள் அதன் பிறகு பல இடங்களில் தொய்வு ஏற்பட்டு பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை மூடாமல் நீண்ட நாட்களாக வேலை நடைபெற்று வருவதாகவும் இதனால் பொதுமக்கள் அவ்வழியாக செல்வதற்கும் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து தாமதமாக பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரளவுக்கு பணிகள் சுறுசுறுப்படைந்தன. இருந்தபோதும் பல இடங்களில் பல மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்களை ஒப்பந்தார்கள் கூறினாலும் அதனை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. அந்த வகையில் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 71வது வார்டு பழனி ஆண்டவர் கோயில் தெருவில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு மழை நீர் வடிகால் பணிகளுக்காக ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டன.  

நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த பணிகளால் அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பினர். இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது 4 பணியாட்கள் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தனர். தினமும் நான்கு பேர் மட்டும் தான் வேலை செய்வீர்களா? மீதி ஆட்கள் எங்கே? தினமும் இவ்வாறு குறைந்த அளவு ஆட்களை வைத்து வேலை செய்தால் எப்போது வேலையை முடிப்பீர்கள்? என அவர் எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர்களை விரைவாக பணிகளை முடிக்கும்படி கூறினார். அதனைத் தொடர்ந்து ஓரளவுக்கு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றன. கடைகளுக்கு முன்பு தோண்டப்பட்டிருந்த பள்ளங்கள் ஓரளவிற்கு வேக வேகமாக மூடப்பட்டன. இருப்பினும் பணிகள் முழுமையாக இன்னும் முடிக்கப்படாமல் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அந்த சாலையின் இரு புறங்களிலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் அருகாமையில் தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக தினமும் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் சில சமயங்களில் சைக்கிளில் வரும் குழந்தைகள் கீழே விழும் சூழ்நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தற்போது கழிவுநீர் குளம்போல் உள்ளது. தினமும் அந்த கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், மேலும் அந்த சாலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட துரித உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகள் இயங்கி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பழனி ஆண்டவர் கோயில் தெருவில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட ஒப்பந்தார்கள் முடித்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: