திருக்கழுக்குன்றம், செம்பாக்கத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம்; காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே செம்பாக்கம், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் ரூ.2.20 கோடியில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்போரூரை அடுத்துள்ள செம்பாக்கம் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண்  விரிவாக்க மைய கட்டிடம் 60 சென்ட் பரப்பளவில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு,  காணொலி காட்சி மூலம்  திறந்து வைத்து பேசினார். திருப்போரூரை அடுத்த செம்பாக்கத்தில் நடைபெற்ற இதற்கான விழாவிற்கு மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் ஏழுமலை தலைமை தாங்கினார். திருப்போரூர் வேளாண்மை உதவி இயக்குனர் அமுதா வரவேற்றார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார். விழாவில், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், துணை வேளாண்மை அலுவலர் மணிமாறன் நன்றி கூறினார்.

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகம், விதை சான்று அலுவலகம், வேளாண்மை பொறியியல் பிரிவு அலுவலகம் ஆகியவைகள் அடங்கிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அந்த அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து திருக்கழுக்குன்றம் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு ஆகியோர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எடையாத்தூர் சரவணன், மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், உதவி செயற்பொறியாளர் ஞானமூர்த்தி, திருக்கழுக்குன்றம் பிரிவு வேளாண்மை உதவி பொறியாளர் யதிந்திரன், திருக்கழுக்குன்றம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: