பேரம்பாக்கம் அரசு பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு மப்பேடு போலீசார் சார்பில் நடந்தது

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரம்பாக்கத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மப்பேடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் தடுப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சீபாஷ் கல்யாண் உத்தரவின்பேரில், திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் பேரம்பாக்கத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்ல பாண்டியன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ கலந்துகொண்டு பேசும்போது, `முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்தில் இருந்து முழுவதுமாக மீட்டு வருவதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். எனவே பள்ளி மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் மேலும் சிறந்து விளங்க வேண்டும். இது போன்ற குட்கா பழக்கத்திற்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்கவேண்டும். படிப்பு மட்டும் தான் வாழ்க்கையில் மென்மேலும் உயர உதவும். அதனால் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்களை நன்கு கவனித்து, பெற்றோரின் கனவுகளை நனவாக்க நன்றாக படித்து உயர வேண்டும்.  மேலும் தங்கள் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து குட்கா பொருட்கள் இல்லாத திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என அவர் தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: