அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி: எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

சென்னை:  தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர், நேற்று ஒன்றிய ஆயுஷ் அமைச்சர் சார்பானந்தா சோனாவால் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, அவர்களிடம் தமிழகம் சார்ந்த கோரிக்கை மனுவை வழங்கினார். பிறகு, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் 2வது எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ வேண்டும். மருத்துவக்கல்லூரி இல்லாத தென்காசி, ராணிப்பேட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவ அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

நீட் தேர்வு குறித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன் வடிவு மீது ஜனாதிபதி ஒப்புதலை விரைந்து பெற்று தரவும், தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு செவிலியர் கல்லூரி நிறுவ நிதியும் கேட்கப்பட்டது. உக்ரைன் நாட்டில் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேசிய நலவாழ்வு குழுமம் பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு இயக்கம் மற்றும் 15வது நிதி ஆணையம் ஆகியவற்றின் கீழ் 2022-23 நிதி ஆண்டுக்கான முதல் தவணை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றார்.

Related Stories: