வியாசர்பாடியில் பரபரப்பு தந்தை திட்டியதால் மகன் தற்கொலை: துக்கத்தில் தாயும் தூக்கு போட்டு தற்கொலை

சென்னை: தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அடுத்த ஒருமணி நேரத்தில் தாயும் தற்கொலை செய்து கொண்டார். வியாசர்பாடி கரிமேடு 2வது தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (55). ஆயிரம் விளக்கு பகுதியில் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இளவரசி என்ற மனைவியும் சுசில் (21) என்ற மகனும் உள்ளனர். சுசில், பிகாம் படித்துவிட்டு கொடுங்கையூர் சேலைவாயில் பகுதியில் நடனப்பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்க்கிறார். சுசில் தினமும் நடன வகுப்பு முடித்து இரவு நேரங்களில் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது தந்தை ரகுநாதன், ‘தினமும் ஏன் லேட்டாக வருகிறாய்’ என மகனை திட்டி வந்தார். இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு சுசில், படுக்கையறைக்கு சென்று அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார். நீண்டநேரமாக சுசில் அறையை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அவரது தாய் மகன் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுசிலை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுசில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் இளவரசி, கூச்சலிட்டு அழுதுள்ளார்.   சிறிதுநேரத்தில் நான் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு தனது மகன் அறைக்கு சென்று அதே மின்விசிறியில் அவரும் தூக்குமாட்டிக் கொண்டார். சிறிது நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் இளவரசியும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  தகவலறிந்த எம்.கே.பி. நகர்  போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்தனர். இளவரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: