திருவள்ளூரில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் பூர்த்தி அடைந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியது. அதேபோல் தற்போது அருகே அரசு சட்டக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரிகளும், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்டத் தலைநகரில் 25க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்ட தலைநகரையொட்டி கடம்பத்தூர் ஒன்றியம், பூண்டி ஒன்றியம், திருவாலங்காடு ஒன்றியம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் அங்கு பெரிய பள்ளிகள் இல்லாததால் திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பென்னாலூர்பேட்டை, கூனிப்பாளையம், சென்றான்பாளையம், பூண்டி, கன்னிமாபேட்டை, ராமஞ்சேரி, சீத்தஞ்சேரி, கடம்பத்தூர், திருப்பாச்சூர், பிரயாங்குப்பம், ஈக்காடு, கீழானூர் மேலானூர், ஒதிக்காடு, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, வெங்கல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திருவள்ளூர் நகரில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

இதனால் காலை மாலை நேரங்களில் நெரிசலான கூட்டத்திலேயே மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். மேலும் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை உள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகள் பேருந்தை இயக்கினாலும், பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்தை நம்பியே பயணம் செய்து வருகின்றனர். தற்போது திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, திருப்பதி, அரக்கோணம், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் கிராமப் புறப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் பேருந்து நிலையங்களில் மாணவ, மாணவிகள் கூட்டம், கூட்டமாக பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு கிராமத்திற்கு செல்லும் பேருந்தில் 100க்கும் மேற்பட்டோர் செல்ல வேண்டிய நிலை வரும்போது, படிக்கட்டுகளில் தொங்கியபடி ஒரு சிலர் செல்கின்றனர். ஆனால் அதில் ஏற முடியாத மாணவ, மாணவிகள் அடுத்ததாக ஒரு மணி நேரம், 2 மணி நேரம் கழித்து வரும் பேருந்தில் செல்லும் நிலையும் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடியாத நிலையும் உருவாகிறது.

4 மணிக்கு மேல் பள்ளியிலிருந்து புறப்பட்டாலும், போதிய பேருந்துகள் இல்லாததால் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையும் அதிகமாக காணப்படுகிறது. எனவே காலை, மாலை நேரங்களில் எந்தெந்த பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் அதிகளவில் வருகின்றனர் என்பதை கண்டறிந்து அந்த பகுதிகளுக்கு மட்டும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே மாணவ, மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது. அரசுப் பேருந்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்ற நிலை இருப்பதால் ஏழை, எளிய மக்கள் இலவச பேருந்து பயண அட்டை மூலமாகவே பள்ளிக்கு பேருந்தில் வந்து செல்கின்றனர். ஆனால் தனியார் பேருந்தில் கட்டணம் செலுத்தி செல்ல முடியாத மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்ட தலைநகருக்கு காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவ, மாணவிகள் விடும் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: