கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, பொன்னேரி பகுதி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி: கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, பொன்னேரி பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொன்னேரி அடுத்த மாதவரம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. முன்னதாக நான்கு கால யாக பூஜையுடன் கடம் புறப்பட்டு ஆலயத்தின் மகா கோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்பு கூடி இருந்த பக்தர் மீது பல்வேறு நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஆலய நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் மற்றும் மாதவரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இதில் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன்,ஒன்றிய கவுன்சிலர் பானுபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த துரைநல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ செங்காளம்மன் ஆலய கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த 24ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 25ம் தேதி புண்யாஹவானம், நேத்ரோன்மீ, யாகசாலை கும்ப பூஜை உத்தவஹோமம், பூர்ணஹூதி, அஷ்பந்தனம், மஹா சாந்தி ேஹாமம், சயணாதிவாசம், விநாயகர், லட்சுமி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் ஆகஸ்ட் 2ம் தேதி கணபதி பூஜை, எஜமான சங்கல்பம், அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, ரக்க்ஷா பந்தனம், 3ம் தேதி மகா சாந்தி ஹோமம், மஹா பூர்ணஹூதி அஷ்டபந்தனம் சாற்றுதல், மகா சாந்தி திருமஞ்சனமும், மகா பூர்ணாஹூதி யாத்ராதானம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 4ம் தேதி விசேஷ சந்தி இரண்டாம் காலை பூஜைகளுடன் நேற்று யாகசாலையில் இருந்து பட்டாச்சாரியார் தலைமையில் புனித நீர் எடுத்து வந்து கோயிலை வலம் வந்து ராஜகோபுரம், மூலவர் கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பிற்பகல் 1000 ஆயிரம் பேருக்கு அன்னதானமும், மதியம் 12 மணிக்கு ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ செங்காளம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலாவும் நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் முன் நின்று சிறப்பாக நடத்தினர். பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த நொச்சிலிதோட்டி காலனியில் தேவி கருமாரியம்மன் ஆலயம் புதியதாக கட்டப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி ஆலயம் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து ஹோம குண்ட பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை மஹா பூர்ணாஹூதி யாக பூஜைகள் தொடர்ந்து தொழிலதிபர் பெங்களூரு என்.எம். கிரிராஜு முன்னிலையில் மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் தொடர்ந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். மஹா கும்பாபிஷேக விழாவில் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ரவீந்திரா, ஒன்றிய அதிமுக செயலாளர் டி.டி.சீனிவாசன், ஒன்றிய குழுத் தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன், ஒன்றிய கவும்சிலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கிராமமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: