தடை உள்ள பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்; இந்து முன்னணி மாநில தலைவர் உட்பட 29 பேர் மீது வழக்கு: ஜாம்பஜார் போலீஸ் நடவடிக்கை

சென்னை: தடை உள்ள பகுதி வழியாக விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்ல முயன்றதாக இந்து முன்னணி மாநில தலைவர் உட்பட 29 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 31ம் தேதி சென்னை முழுவதும் 2,554 சிலைகள் அமைக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் வழிபாட்டிற்கு பிறகு நேற்று முன்தினம் போலீசார் பாதுகாப்புடன் பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் என 4 இடங்களில் சிறியதும் பெரியதுமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டது. போலீசார் திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் பகுதியில் அமைந்துள்ள மசூதிகள் வழியாக விநாயகர் ஊர்வலம் செல்ல ஏற்கனவே தடை விதித்திருந்தனர். இந்நிலையில், இந்து முன்னணி மாநில தலைவர் இளங்கோவன், மாநில செயலாளர் மனோகரன், முருகானந்தம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் போலீசார் தடை விதித்திருந்த ஜாம்பஜார் பகுதியில் உள்ள மசூதி வழியாக சிறிய விநாயகர் சிலைகளை கையில் எடுத்து கொண்டு ஊர்வலம் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவர்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இந்து முன்னணி நிர்வாகிகளிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்து ெசன்றனர். அதைதொடர்ந்து ஜாம்பஜார் போலீசார், தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி மாநில தலைவர் இளங்கோவன், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் மனோகரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் செல்வம் உட்பட 29 பேர் மீது ஐபிசி 188, 143 மற்றும் சிட்டி போலீஸ் ஆக்ட் 41 அகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: