வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் 61 ஏரிகள் முழுமையாக நிரம்பியது: ராஜாதோப்பு அணையும் நிரம்புகிறது

வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தொடரும் மழையின் காரணமாக 61 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமுள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதேபோல் மோர்தானா, ஆண்டியப்பனூர் அணைகளை தொடர்ந்து ராஜாதோப்பு அணையும் நிரம்பி வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் மட்டுமின்றி சிற்றாறுகள், காட்டாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதிலும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை பொறுத்தவரை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 519 ஏரிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக படிப்படியாக நிரம்பி வருகின்றன. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 6 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை 2 ஏரிகளும், 50 முதல் 75 சதவீதம் வரை 26 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 49 ஏரிகளும், 25 சதவீதத்துக்கும் கீழ் 18 ஏரிகளும் நிரம்பியுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 33 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை 12 ஏரிகளும், 50 முதல் 75 சதவீதம் வரை 61 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 136 ஏரிகளும், 25  சதவீதத்துக்கும் கீழ் 126 ஏரிகளும் நிரம்பியுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 22 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை 2 ஏரிகளும், 50 முதல் 75 சதவீதம் வரை 8 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 17 ஏரிகளும் நிரம்பியுள்ளன.

அதேபோல், மூன்று மாவட்டங்களில் பெரிய அணையான மோர்தானா அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 மி.மீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த அணை தனது முழு கொள்ளளவான 37.72 அடியை எட்டி, அணைக்கு வரும் 163 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் ஓடை அணை தனது முழு கொள்ளளவான 26.24 அடி நிரம்பி, அணைக்கு வரும் உபரிநீர் 43.79 கனஅடி வெளியேற்றப்படுகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் ராஜாதோப்பு அணை தனது முழு கொள்ளளவான 24.57 அடியில் 11.94 அடி நிரம்பியுள்ளது. இந்த அணை பகுதியில் நேற்று 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், மூன்று மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு (மில்லி மீட்டரில்): மோர்தானா 12, மேலாலத்தூர் 4.20, பொன்னை அணைக்கட்டு 16.60, ராஜாதோப்பு கானாறு 5, ஆண்டியப்பனூர் ஓடை 12, வாணியம்பாடி 34, ஆலங்காயம் 4, நாட்றம்பள்ளி 15.20, ஆம்பூர் 19, ராணிப்பேட்டை 18.40, பாலாறு அணைக்கட்டு 50, வாலாஜா 22, ஆற்காடு 34.20, கலவை 43.40, காவேரிப்பாக்கம் 26, பனப்பாக்கம் 19.20.

Related Stories: